கார்ட்டூனில் விடுபட்ட கதைகள்

இந்த கார்ட்டூனை வரைந்த சுரேந்திரா மிக பிரமாதமான சமூக-அரசியல் விமர்சகர். சச்சினை இச்சமூகம் தற்பொழுது எப்படி பார்க்கிறதென்ற தமது புரிதலை அசால்ட்டாய் சில கோடுகளில் இங்கு சொல்லி விடுகிறார் மெல்லிய ஹ்யூமர் கலந்து. ஆனால் படத்தை ஆராய புகுந்தால் அபத்த களஞ்சியமாய் இருக்கிறது. ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

  • வீட்டில் உள்ள எல்லோரும் இடது கை பழக்கம் உள்ளவர்கள் இல்லையெனில், கணினியின் மெளஸ் வலது புறம்தான் இருக்க வேண்டும். இந்த படத்தில் அது இல்லை அல்லது இடதுபுறம் இருப்பது போல் சுட்டிகாட்ட பட்டுள்ளது.
  • CPU என்பது கணினி வேலை செய்ய அவசியம் தேவைபடும். இங்கு அது மேஜை மீதோ மேஜையின் கீழோ காணவில்லை.
  • வரவேற்பரையில் டெலிஃபோன் மிஸ்ஸிங். சரி எல்லோரும் செல் ஃபோன் வைத்து கொள்ளும் குடும்பம் என்று விட்டு விடுவோம். இண்டர்நெட்க்காக ஒரு கனெக்ஷன் வேண்டாம்? அட CPUவே இல்லை இண்டர்நெட்டாம்ல…
  • 2.1 சரவுண்ட் சிஸ்டம் போலும் வாகாக செண்ட்ரல் மற்றும் பேஸ் ஸ்பீக்கர்களை ஒளித்து வைத்து விட்டார்கள். ரொம்ப சிக்கணம்.
  • AC வேலை செய்ய மின்சாரம் தேவையில்லை போலும் ப்ளக்கையோ வயரையோ காணோம். அது சரி மின்சாரம் கிடைக்கும் லட்சனத்தில் ப்ளக்கும் வயரும் ஒரு கேடா என்று வெறும் ACயை மாட்டி வைத்த மத்தியதர வர்க்க ஜம்பம் போலும்.
  • குட்டி பையன் நிறைய படிக்கிறான் சிறு வயதிலேயே செம சொட்டை பாவம்.
  • வீட்டினுள் வேலி! சரி இருக்கட்டும், அது தரையில் பதிந்துள்ளதா அந்தரத்தில் தொங்குகின்றதா?
  • Perspective அறிவு இல்லாமல் ஃப்ளவர் வேஸ் இருக்கும் மேஜையை கோனலாக வரைந்து விட்டார். சரி அவர் ஆர்க்கிடெக்டோ இண்டீரியர் டிசைஞ்ரோ இல்லை ஆனால்….
  • இடப்புற சுவற்றுக்கும் எதிர்புற சுவற்றுக்கும் இடையே கோடு போட வேண்டும் என்பது குட்டி பயல்களுக்கு கூட தெரியுமே!
  • எங்கிருந்து ஒளி வருகிறதென்று தெரியா திசை குழப்பம். வெளியிலிருந்தும் சீலிங்கிலிருந்தும் சுவர் விளக்கிலிருந்தும் என எல்லா திசைகளிலுமிருந்து பாய்கிறது வெளிச்சம். இப்படி எல்லா கோணங்களிலுமிருந்து ஒளி பாய்கையில் நிழல்களின் இத்துல்லியம் சாத்தியமில்லை. அபத்தம்.

மேலேயுள்ள கார்டூனில் உள்ள குறைகளை கண்டு பறைசாற்றுவது என் நோக்கமில்லை. அது ஒரு கார்ட்டூன் அவ்வளவே. அதன் கருத்தை கண்டு புன்முறுவல் செய்து, கடந்து செல்ல வேண்டுமே தவிர இப்படி மாமல்லன் அய்யா போல் முக்கி முக்கி பாமரரை பயமுறுத்தும் மொழியில் எழுதி கலா ரசனையாளனாக தம்மை காட்டி கொள்ள கூடாது என்பதற்கே இப்பதிவு. இப்படி முக்கி முக்கி எழுதுகிறார்கள் என்றுதானே எல்லா எழுத்தாளர்களையும் கிழித்து தொங்க விட்டு கொண்டிருக்கிறார். அவர் சொல்லி சொல்லி தானே அபத்தங்களை இனம் கண்டு தெளிகிறோம் நாம். அவரே இப்படி முக்கலாமா எனும் கேள்வி எழுப்பிய ஆதங்கமே. அவரும் அப்படிதான் என்றால் மற்றவரைச் சுட்டும் தார்மீக உரிமையை இழந்து விடுகிறார், அவ்வளவே!

Advertisements
Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

நெய்தல் குறிப்புகள்

குழுமத்தின் ஒரு பகுதி

காந்தி பார்க்கும் திசையில் தான் கூடினோம் தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தொடர்ந்து கொல்லபடும் பிரச்சனைகளை பற்றி கலந்தாலோசிக்க. ட்விட்டரில் TBCDக்கு திடீரென்று இந்த எண்ணம் உதித்தது ஏன் தமிழக மீனவர்கள் கொல்லபடுவதை ஊடங்கங்களும் அரசியல் கட்சிகளும் மௌனமாகவே எதிர்கொள்கிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். குறிப்பாக தேசிய ஊடங்களில் ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டாலோ லண்டனில் பஞ்சாபிகள் பிரச்சனை என்றாலோ அமெரிக்க இராணு்வத்தில் பனி புரியும் சீக்கியர்களுக்கு பிரச்சனை என்றாலோ  பெரும் கூச்சல் இடுகிறார்கள். தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கண்டு கொள்வதே இல்லை. இது ஏன் ஒரு தேசிய பொது பிரச்சனையாக விவாதிக்க பட கூடாது எனும் எண்ணம் ட்விட்டரில் #tnfishermanஐ தோற்றுவித்தது. பின் நிகழந்தது தமிழ் இணைய பரப்பில் இதுவரை நிகழா அற்புதம். அலையலையாய் ட்வீட்டுக்கள் குவிந்தன. பெருமழையாய் பெய்து தொலைத்தார்கள் தங்கள் உள்ள குமுறல்களை. அழுது அரற்றி வசை பாடி ஊழி கூத்தாடி தங்கள் குமுறல்களை தனித்து கொண்டார்கள். தொடர்து நான்கு நாட்களுக்கும் மேலாக ட்விட்டர் ட்ரெண்டில் #tnfishermanஐ முதலிடத்தில் இருத்தி காட்டினார்கள் இணையத்தமிழர்கள். வட இந்திய ஊடங்கங்கள் தலை திருப்பினார்கள் காது கொடுத்தார்கள். ஒரு பொருட்படுத்ததக்க விஷயமாக கருதாத ஒன்றை ஒ! இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா என கண் விரித்தார்கள். எதற்கு TBCD ஆசைப்பட்டாரோ அது நடந்து விட்டது. நடந்ததும் முட்டு சந்தில் தொடர்ந்து இடித்து கொண்டிருக்கும் ஒரு ஆற்றாமை மெல்ல ஊடுருவியது எங்களில் சிலருக்கு. இதை இன்னும் விரித்து செல்லவும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவும் ஒரு தேவை உருவாகி விட்டதை இடித்து கொண்டிருந்த சிலர் உணர்ந்தோம். நண்பர் கவிராஜன் நாம் மெரினாவில் சந்திக்கலாம் என ட்வீட்ட ஜ்யோவராம் எங்கே எப்போ என கேட்க ஜனவரி முப்பது மாலை 5.30 காந்தியிடம் சரண் புகுவோம் என்றது  அடியேன். ஒரு திறந்த அழைப்பாய் இந்த செய்தி பரவலாக சென்றடைந்து நிறைய பேர் வருவதற்கு தொலைபேசியிலும் ட்வீட்டுகளிலும் விருப்பம் தெரிவித்தார்கள்.

சற்றேரத்தாழ ஆறு மணி வாக்கில் கணிசமான பதிவர்களும் ட்வீட்டர்களும் கூடிய பின் ஜாகை மணலுக்கு கடத்தப்பட்டது. வாகாக அமர்ந்த பிண் தோழர் வளர்மதி ஒருங்கினைப்பு செய்ய ஒப்புகொணடு துவங்கிய கலந்துரையாடல் சில நேரங்களில் விவாதமாகவும் உருவெடுத்தது. முதலாவதாக உரையாடியது பிரச்சனையற்றதாக நம்பப்பட்ட ஒன்றை தொடர்ந்து இணையத்தில் பேசி முதல் முறையாக அதன் மீது கவனகுவிப்பை  நிகழ்த்தி காட்டி இது ஒரு பிரசன்னை என புரிய வைத்த இணையத்தமிழர்களின் பங்களிப்பு பற்றி, இது ஒரு முன்னோடி செயல்பாடு என்பதால் பங்களிப்பு செய்த அத்தனை பேருக்கும் நன்றி பகிரபட்டது. மக்கள் காய்ந்த சருகுகள் போல் இருக்கிறார்கள் ஒரு சிறு பொறி போதும் அவர்கள் பற்றி எரிய எனும் மார்க்சிய படிப்பினையை நேரடியாக உணர்த்தியது இந்த சம்பவம். அனால் இதன் எல்லை இணையயுலகம் மட்டுமே என்பதும் புரிந்தே இருக்கிறது. அடுத்த கட்டமாக  இந்த கோபத்தை வெகு ஜனங்களிடம் எப்படி எடுத்து செல்வது, அரசுக்கு எப்படி நெருக்கடி கொடுப்பது, இந்த அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அழுகிய மீன்களை பொட்டலம் கட்டி அனுப்பலாமா் என்பது போன்ற விஷயங்கள் விவாதிக்கபாட்டன. வரும் தேர்தல் வரை இந்த பிரச்சனையை நீர்த்து போக விடமால் இயங்குவது போன்ற கருத்துக்கள் ஏற்று கொள்ளப்பட்டன.

இதற்கான ஒருகினைப்பை செய்வது எப்படி என்று தொடர்ந்து பேசினோம். இடையில் பல தளங்கள் இயங்குவது ஒருகினைப்பை சாதியமாற்றதக்குகிறது எனும் ஒரு கருத்தும் முன் வைக்கப்பட்டது. உதாரணத்துக்கு  http://www.savetnfisherman.org/ மற்றும் http://www.savetnfishermen.org/என  இரு தளங்கள் இயங்குவது சுட்டி காட்டப்பட்டது. அது ஒரு பிரச்சனை அல்ல இப்படி பலரின் பங்களிப்பு இருப்பது நல்லது எனவும் ஆயினும் அவர்கள் யார் அறிந்து தொடர்பு கொண்டு இணைந்து செயல்படுவத்தின் சாத்தியங்களை பரிசிளிக்கலாம் எனும் முடிவு எட்டப்பட்டது. அனால் ட்விட்டரில் பல டாகுகள் வருவது தவிர்க்கப்படவேண்டும் எனவும்  #tnfishermen #nagapattinam போன்ற டாகுகள் தவிர்த்து #tnfishermanஐ மட்டுமே முன்னிலை படுத்தவும் எல்லோரும் ஒருமனதாக ஏற்று கொண்டோம். (துரதிஷ்ட்டவசமாக இன்று வெளியான டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தி #tnfishermen டாகை உபயோகப்படுத்தி இருக்கிறது.) இடையில் வந்த இந்த பிரச்சனை தொடர்பாக நேரடியாக மந்திரிகளை சந்திப்பது மனு கொடுப்பது போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டு முலையிலேயே நிராகரிப்பட்டது. அதை குழுமம் செய்ய வேண்டாம் எனவும் தனி நபர்கள் தங்களுக்கு இயன்ற தொடர்புகளை பயன்படுத்தி இதை செய்யலாம் என ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களை சமயோசிதமாக பயன்படுத்தி கொள்வது என்பதை ஏற்று கொண்டோம். சுஷ்மா ஸ்வராஜ் வருகையின் பொழுது அவர்களை சந்தித்து தரவுகளை வழங்கி  இது ஒரு தேசிய பிரச்சனையாக அணுக கேட்டுகொள்வது, தேர்தல் நேரத்தில் இதை அரசியல் படுத்துவது போன்ற கருத்துக்கள் எட்டப்பட்டன.

குழுமத்தின் மறு பகுதி

மீடியாக்களின் மிக மோசமான செயல்பாடுகளை தோலுரித்து காட்டுவது. குறிப்பாக ‘தி ஹிந்து’ போன்ற பத்திரிக்கைகள் இலங்கை அரசின் செய்தி தொடர்பு துறை போல் செயல்படுவதை வெகுமக்களுக்கு புரிய வைக்க வேண்டும், இந்த பத்திரிக்கைகளை புறக்கணிக்க சொல்லி பிரசார இயக்கம் மேற்கொள்வது என விரிந்தது பேச்சு. குறிப்பாக எல்லோரும் தி ஹிந்து வின் மேல்தான் அதிக காண்டுடன் இருந்தார்கள் என சொல்லலாம். முக்கியமாக நண்பர் ரோசாவசந்த் அது ஒரு இடது சாரி பத்திரிகை  எனும் பிம்பம் உடைக்க பட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க எல்லோரும் ஏற்று கொண்டோம். தொடர்ந்து இதற்க்கு ஒரு மீடியா வாட்ச் போன்ற ஒரு செயற்க்குழு அமைப்பது பற்றியும் சில முடிவுகள் எட்டப்பட்டன.

மெல்ல உரையாடல் நிகழ்ந்த கொலைகள் கொடுஞ்செயல்களை சார்ந்த தரவுகள் நம்மிடம் இல்லை என்பது பற்றியும் தப்பி பிழைத்த மீனவர்களிடம் இருந்து எந்த செவ்வியும் காணொளியும் எடுக்கப்படாதது பற்றியும் இருக்கும் தகவல்கள் அரை தகவல்களாக இருப்பது பற்றியும் இதை ஒருங்கிணைத்து ராமேஸ்வரம் வேதாரண்யம் பகுதிகளில் உள்ள மீனவ சமூகத்தினரிடம் களப்பணி செய்து இந்த தரவுகளை திரட்டுவது பற்றியும் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இணையம் மற்றும்  யூடியூப் போன்ற தளங்களின் சாத்தியப்பாடுகளை முழுக்க பயன்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என ஒப்புக்கொள்ளப்பட்டது. அரசோ காவல்த்துறையோ செய்ய மறந்த மறுத்த இதை நாம் தான் முன்னெடுத்து செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த பிரச்சனையில் தொடர்ந்து அரசோ காவல்த்துறையோ மீனவர்கள் எல்லை தாண்டி விட்டார்கள் எனும் கருத்தை முன் வைப்பதை ஏற்று கொள்ள முடியாது எனவும் இது கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய ஒரு நிலைப்பாடு என தோழர் பத்ரி பதிவு செய்தார்.

பத்ரி  தொடர்ந்து பேசுகையில் தமிழ் மீனவன் மற்றும் மீனவன் என்று இரு வகை அடையாள சிக்கல்கள் இருப்பதுவும் இந்திய அரசு இவர்கள் பிரச்சனையை கண்டு கொள்ளாததற்கு தமிழன் என்பது காரணம் அல்ல அவர்களின் வர்க்கமே காரணம் எனும் கருத்தை முன் வைத்தார். கடற்கரைகளை பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்க இவர்கள் தடையாய் இருப்பதுவும் அவர்களை அச்சுறுத்தி அவர்கள் வாழ்விடத்தில் இருந்து அகற்றுவதற்க்கான ஒரு பெரும் திட்டமிடல் இந்த கொலைகளின் பின்னணியில் செயல்படலாம் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. மாற்றாக இதில் இரு வகை அடையாலங்களினாலும் தமிழ் மீனவன் பாதிக்கப்படுகிறார்கள், சிங்களர் தாக்குவதற்கு தமிழன் எனும் அடையாளமும் இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு தமிழன்/மீனவன் எனும் இரு வகை அடையாளமும் காரணியாக செயல்படுவதை பெரும்பான்மையாக அமோதித்தார்கள். மீனவச்சமூகம் பொது சமூகத்தில் இருந்து விலகி இருப்பது ஒரு கருத்தாக முன்வைக்கப்பட்டு பெரும் விவாதமாக உருவெடுத்து உரையாடல் திசை மாறி செல்ல துவங்கியது. நீண்ட நேரம் இரு தரப்பும் ஒரு மைய்ய புள்ளியை எட்டாமல் இருந்து பின் அச்சமூகத்தை பற்றி தவறான புரிதலுக்கு நாம் விலகி இருப்பதுவும் ஒரு காரணம் எனவும் அவர்களின் சமூக பங்களிப்புகள், செயல்பாடுகள் வாழ்முறைகள் பற்றிய புரிதலுக்கு நாமும் நம்மை உட்படுத்திகொள்ள வேண்டும் என முடிவு எட்டப்பட்டது.

சட்டபூர்வ செயல்களை பற்றிய உரையாடலின் பொழுது வழக்குரைஞர்  சாமிதுரை அவர்கள் இது விஷயமாக இதுவரை எடுக்கப்பட்ட சட்டபூர்வமான நடவடிக்கைகள் திரு.வைகோ அவர்களின் ‘குற்றம் சாட்டுகிறேன்’ புத்தகத்தில் உள்ள தரவுகள் பற்றி ஒரு நீண்ட உரை நிகழ்த்தினார். இதை மேலும் புரிந்து கொள்ள அடுத்த சனி/ஞாயிறில் ஒரு அரங்க கூட்டம் ஏற்பாடு செய்வதாக தோழர் பத்ரி ஒப்புகொண்டார். மேலும் தகவல்கள் ஒருகினைக்கபட்ட பின் சிறு அச்சு வெளியிடுகள் மற்றும் இணைய வெளியிடுகள் வெளியிடுவது பற்றியும் அவர் சில யோசனைகளை முன்வைத்தார். கூட்டம் களைவதற்கு சற்று முன் ஒரு கேள்வி வந்தது ‘கொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டால் இந்த குழுமம் களைந்து விடுமா அல்லது ஏற்கனவே கொல்லப்பட்ட பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நீதி வழங்க தொடர்ந்து போராடுவோமா’ என்று. கொலைகள் தடுக்கப்படவேண்டும் என்பது இந்த குழுமத்தின் முதன்மை செயல்பாடு எனவும் இது போன்ற பிரச்சனைகளில்  தொடர்ந்து இயங்க வேண்டும் எனவும் மக்களுக்கு அநீதி நிகழும்பொழுதெல்லாம் கொதித்தெழும் நண்பர்கள் இக்குழுமத்தில் தங்களை இணைத்து கொள்ளலாம் என அறிவிக்கபட்டது. ஆடை நெய்வது போன்ற ஒரு பனி இது, மெல்ல பல்வேறு ரக நூல்களை எடுத்து தரம் பிரித்து இணைத்து உருவாக்குவது போல் கவனமாக செய்ய வேண்டும். மணல் துகள்கள் தட்டபட்டன. நம்பிக்கைகள் இணைக்கப்பட்டன. வங்கக்கடல் ஆர்பரித்து கொண்டிருந்தது. காந்தி வேறெங்கோ பார்த்துகொண்டிருந்தார், நாங்கள் களையும் பொழுது.

பி.கு.1: கலந்து கொண்ட பலரின் பெயர்கள் தெரியாததுவும், எனக்கு சிலரை நேரடியாய் அறிமுகம் இருந்ததுவும், சிலர் தீவிரமாய் பேசியதும் என் கவனத்துக்கு வந்தார்கள் என்பதுவும் மட்டுமே இந்த பதிவில் எடுத்தாளப்பட்டவர்களின் பெயர் காரணம்.இந்த பதிவில் இல்லாமல் இருந்தாலும் வந்தவர்கள் அனைவருமே முக்கியமானவர்கள் . அவர்கள் இல்லாமல் இக்கலந்துரையாடல் சாத்தியபட்டிருக்காது. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

பி.கு.2: மிக விரைவாக செயல்பட்டு டைம்ஸ் ஆப் இந்தியாவில் இந்த செய்தியை கொண்டு சேர்த்த அதிஷாவுக்கும் நன்றி.

Posted in Politics | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தீராத பக்கங்கள்…

இதோ உங்கள் கண்முன் எங்கள் முதல் படைப்பு. இதற்கான கரு எங்கள் இருவருக்குள்ளும் வெகு நாட்களாக ஊறி கொண்டிருந்தது. தொடர்ந்து விவாதித்து வந்தோம். பல கொலைகள் செய்து திருப்த்தியுறாமல் பின் தானே அந்த வலியின், வதையின் சுகத்தை அனுபவிக்க துடிக்கும் ஒருவனின் கதையாகவே இது எங்கள் எண்ணங்களில் வேர் கொண்டிருந்தது. ஒரு பெரும் திரைக்கதைக்கான சாத்தியங்களை உள்ளடக்கி அது வளர்ந்து கொண்டிருந்த பொழுது மார்க்வேஸின் ‘தி தர்ட் ரெசிஞேஷன்’ வாசிக்க நேர்ந்தது. வதையின் தத்ரூப வர்ணனையில் மூழ்கி திளைத்து எழுதப்பட்ட அந்த எழுத்துக்கள் ஏன் திரை வடிவம் பெறவில்லை என கேள்விகள் எழுந்தது.

பின் ஒரு நாள் திடீரென்று கணேஷ் நாம் கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளல்லாமா என ஒரு கேள்வி எழுப்ப, சரி என்று  எங்கள் இந்த கதையைக்கு ௫ நிமிடங்களுக்குள்ளான ஒரு திரை வடிவம் கொடுக்க அமர்ந்தோம். மிக சுருக்கமாக இந்த வாழ்வை சொல்லுவதில் இருந்த சிக்கல்களை ஆய்ந்து கொண்டிருந்த பொழுதே, சிறு பருவத்து வன்முறைகளை இதில் இணைக்கும் திட்டம் உருவானது. அதை கோர்வையாய் எழுதி, வதையை மிகவும் ஆழ்ந்து ரசிக்கும் ஒரு வீர்யமுள்ள கதாபாத்திரமாய் உருவாக்கி ‘வாக்குமூலம்’ என பெயரிட்டு, ஒரு ஹான்டிகாம்மில் படம் பிடித்து, வெட்டி தொகுத்து கலைஞர் தொலைகாட்சியில் அந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனத்துக்கு எடுத்து சென்றோம்… ஒரு காட்சியை கூட பார்க்கவில்லை. தட்டை கணினியில் இட்டு சில வினாடிகள் சென்றதுமே அனைத்து விட்டு ‘நாங்கள் டெலிகாஸ்ட் குவாலிட்டி எதிர்ப்பார்க்கிறோம்’ இதை எங்களால் மதன் இடமும் பிரதாப் இடமும் எடுத்து செல்ல முடியாது என கூறி விட்டார்கள். ‘சரி இது போட்டியில் கலந்து கொள்ள தகுதியுள்ள கதை என தோன்றினால் பார்த்து விட்டு அழையுங்கள் நாங்கள் மீண்டும் நீங்கள் எதிர்பார்க்கும்  தரத்தில் படம் பிடித்து தருகிறோம் என்று கூறி விட்டு அகன்று வந்தோம்.

அவர்களை தொடர்ந்து துரத்திய கணேஷ் ஒரு நாள் என்னிடம், அவர்கள் படம் பார்த்து விட்டார்கள் எனவும், பிடித்து இருந்தது, நல்ல கமெராவில் படம் பிடித்து எடுத்து வாருங்கள் போட்டியில் நுழையலாம் என கூறினதாக சொன்னான்! அதற்க்கு நான், இல்லை அவர்கள் பார்க்க வில்லை எனவும், நீ தொடர்ந்து அவர்களை தொந்தரவு செய்வது தாங்காமல் அப்படி சொல்லி இருக்கலாம் என யூகம் செய்கிறேன் எனவும் கூறி, ஆனாலும் நீ அசை படுகிறாய் எடுத்து விடுவோம் என எதையும் யோசிக்காமல் சொன்னேன்.

மீண்டும் எடுக்கும் பொழுது முன்பே எடுத்த ‘வாக்குமூலத்’தையே ஏன் எடுக்க வேண்டும் என்றும், அதன் அதீதமான வன்முறை த்வனியை குறைத்து இன்னும் ரிலாக்சான, கம்போஸ்ட் த்வனியோடு இருக்கும் கதை நாயகனை உருவாக்கினோம். மெல்லியதாக ஒரு காதல் கோணத்தை புகுத்தினோம், இன்னும் சிற்சில மாற்றங்கள் செய்து கதையின் போக்கை அப்படியே வைத்து மொத்தமாக புது டோன் குடுத்தோம். மிக துல்லியமாக் பட்ஜெட் போட்டு 6000-7000 ருபாய்கள் படத்தை முடித்து விடும் நோக்கத்துடன் ஒரே நாள் வாடகைக்கு காமெராவை எடுத்து, காலை முதல் அடுத்த நாள் அதிகாலை வரை தொடர்ந்து ஷுட் நடத்தி அத்தனை காட்சிகளையும் படம் பிடித்து கொண்டோம். ஷூட்டிங்கின் பொழுது நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வுகளை வேறு ஒரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேண், டாஸ்மாக் அனுபவம் உட்பட!

அதன்பின் ஒரே நாளில் எடிட்டிங்கும் முடித்து விடும் நோக்கத்தில் உட்கார்ந்தால் இழுத்து கொண்டே சென்று இரண்டு நாட்கள் ஆகியது. கணக்கு பார்த்ததில் மொத்த செலவு 10000 ரூபாய் ஆகி விட்டது.ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு பணம் என்ற கணக்கு பார்த்து கொண்டிருந்ததில் பல டெக்னிக்கல் குறைபாடுகள் நிகழ்ந்து விட்டன. டப்பிங்கும் ஒலி சேர்க்கையும் செய்யாததான் குறை நன்றாகவே தெரிகிறது! ஆயினும் கவலை ஏதும் இல்லை. முதல் படைப்பு முதல் அனுபவம் திருப்தியாகவே இருக்கு.

பின் கலைஞர் தொலைகாட்சிக்கு அனுப்பி விட்டு காத்திருந்தோம்… காத்திருந்தோம்… காத்திருந்தோம். எந்த பதிலும் இல்லை. அட படம் செலெக்ட் ஆவல என்று கூட சொல்ல வில்லை அந்த தயாரிப்பு நிறுவனம்! கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் இரண்டாம் பாகம் ஒளிபரப்பு துவங்கிய பின்னும் அடுத்த வாரம் உங்கள் படம் வரலாம் என்றே சொன்னார்கள். முற்றிலும் நம்பிக்கை இல்லை என நான் கூறிய பொழுதும் கணேஷ் மிகவும் நம்பிக்கையோடு இருந்தான். பின் அது வர போவது இல்லை தெரிந்ததும் கதறி அழுத அவனை தேற்றி, இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேறு வழிகளை தேடுமாறு கூறினேன். வெறியோடு இயங்கினான். எனது பனிச்சுமை காரணமாக எள்ளளவும் நான் முனையவில்லை இந்த படத்தை அரங்கேற்ற. நான் எப்பொழுதும் அப்படித்தான், என்னை பொறுத்த வரை படம் எடுத்து முடிந்த உடனே சலனம் அற்ற நிலைக்கு வந்து விட்டேன். அலைந்து திரிந்து இன்று இந்த படம் தமிழ் ஸ்டுடியோவின் அரங்கில் பங்கேற்றதற்க்கு முழு காரணமும் அவன் மட்டுமே.

டிசம்பர் 11, 2010 அன்று நிகழ்ந்த தமிழ் ஸ்டுடியோவின் 27ம் குறும்பட நிகழ்வில் இயக்குனர் திரு.கஸ்தூரிராஜா மற்றும் கணிசமான மக்கள் முன்னிலையில் எங்கள் படமும் திரையிடப்பட்டது.  பின் திரு.கஸ்தூரிராஜா அவர்கள் எடுத்து கொண்ட நீண்ட நேரமும் அவரது திரையுலகு சார்ந்த நீண்ட அனுபவ பகிர்வுகளும்,மக்களின் கருத்துக்களையோ எதிர்வினைகளையோ சந்திக்க முடியாமல் செய்து விட்டது. அந்த அனுபவ பகிர்வுகள் மிக முக்கியமானவையாக இருந்த பொழுதும் எங்கள் படங்களை பற்றிய பார்வையை மக்களிடம் இருந்து கேட்க முடியமால் போனது வருத்தம். காரணம் எங்கள் படத்தை அவர் விமர்சனத்தின் ஊடாக முற்றிலும் ‘புரியவில்லை’ என கூறி நிராகரித்து விட்ட பின் அங்கு குழுமி இருந்தவர்களின் கருத்தை கேட்க விரும்பினோம்.நிகழவில்லை. அல்லது நாங்கள் நினைத்த மாதிரி நிகழவில்லை. ஆயினும் மேடை நாகரித்திற்க்காகவோ அல்லது புதியவர்களை ஊக்குவிக்கு வேண்டும் என்பதற்காகவோ படம் நல்லா இருக்கு என்று சொல்லாத அவர் நேர்மையை வரவேற்கிறோம். அவருக்கு ஏற்றார் போல் கதைகள் இருந்தால் அணுக சொல்லி இருக்கிறார். பார்க்கலாம்!

படம் என்ற வகையில் இது ஒரு வாழ்க்கை பதிவு என்றே நாங்கள் நினைக்கிறோம். பலரும் எங்களை துளைத்து எடுப்பது போல் இது அந்த கதாபாத்திரத்தின் செயல்களை நியாய படுத்தவோ ஆதரவு தெரிவிக்கவோ இல்லை. அதே நேரம் விமர்சிக்கவோ கருத்து சொல்லவோவும் கூட இல்லை. ‘ஜஸ்ட் லைக் தட்’ இது ஒரு பதிவு.

கீஸ்லோவ்ஸ்கியின் ‘அ ஷார்ட் பிலிம் அபௌட் கில்லிங்’இன் முதல் காட்சியில் ஒரு பூனையை கொன்று கழுத்தில் கயிறு கட்டி தொங்க விட்டு ஓடும் சிறுவர்கள், கிம் கி டுக்கின் ‘ஸ்ப்ரிங் சம்மர் பால் விண்டர் & ஸ்ப்ரிங்’இல் வரும் சிறுவனின்  தவளையை துன்புறுத்தும் காட்சிகள் போன்றவைகளை வலிந்து தேடி சொல்ல எத்தனிக்க வேண்டாம். அந்த ஓலக சினிமாவெல்லாம் நாங்களும் பார்த்தாச்சு. நம்மூரு பிள்ளையாருக்கு மூத்திரம் கொடுத்த ஓணானை கொன்று திளைத்த காலங்களையும், சல்லாபித்து பிரிய முடியாமல் தவித்த நாய்களை கல்லெறிந்து பிரித்த பருவங்களையும் இன்னும் பல பல வன்மமான தருணங்களையும் நினைவு படுத்தி கொண்டே இப்படம் எடுக்க பட்டது. எனவே இந்த படம் வன்முறை மற்றும் வதை குறித்த சிறு விவாதங்களை எழுப்பினாலே எங்களுக்கு முழு வெற்றி.

 

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்